இனிய எங்கள் உலகமே!
இறைவன் உன்னை படைத்ததும்,
மேனியழகு எழில் கொஞ்சும் - உன்
மேன்மை எத்துணை இனிது.
இயற்கை என்னும் ஆடையுடுத்தி,
இளந்தளிர் அழகு போன்றே,
வியற்கும் வண்ணம் மெருகூட்டி,
விந்தைகள் வைத்தார் இறைவன்.
காட்சிக்கு விருந்து அளிக்கும்
கானகமும் பச்சைப் புல்வெளியும்,
மாட்சிக்கு மகுடம் சூட்டும்
மாசமுத்திரம் ஆறும் அருவியும்.
கேடில்லா காற்றைத் தந்திட்ட,
கொடைமிகு சுற்றுச் சூழலும்
வீடில்லா மாந்தருக்கும் புவியின்
விலங்குகட்கும் நல்உறை விடமே
வீசுந்தென்றலும் தடம் மாறா
விசும்பின் பருவ சுழற்சியும்
மாசின்றி கிடைத்த குடிநீரும்
மாயமாய் இன்று போனதேனோ?
இந்தப் பொல்லா மனிதரின்
இரக்கமற்ற கொடுஞ் செயலால்
உந்தன் மென்மையும் அழகும்
உருக்குலைந்து சீர் கேட்டதே!
பேராசை ஆடம்பரம் என்னும்
பேராயுதம் கொண்டு உந்தன்
வேரையே அறுக்க நினைக்கும்
வெட்கம் கெட்ட அறிவீனர்கள்.
வர்த்தகம் பொருளாதாரம் என்றே
வளத்தை வாரிச் சுரண்டுகின்ற
அர்த்தமில்லா மனித வாழ்க்கை
அழியட்டும் உந்தன் சீற்றத்தால்
நிலத்தை நாசமாக்கி இருக்கும்
நீரையும் மோசமாக்கி நுகரும்
நலந்தரும் காற்றை விடமாக்கி
நல்லது யாவும் முடமாக்கினர்
இவ்வுலகம் உயிர்களின் இல்லம்
இங்குமனிதர் வாழத் தகுதியில்லை
கவ்வும் வேட்டை விலங்குகளாய்
கருணையற்ற மனிதர் உளரே!
உலகமே! பொறுத்தது போதும்
ஊறுகண்ட உந்தன் இயற்கையை
கலகம் செய்ய அனுப்பிவிடு
கண்டதனை மனிதர் திகிலுறட்டும்
வாதைகண்ட வானமே வாரியூற்று
வெள்ளம் வெப்பம் நெருப்பெனவே
போதைகொண்ட மானிடர் உந்தன்
பொறுமையை சோதித்தது போதும்
காற்றே கானகமே கனன்றெழு
கால்தாங்கும் நிலமே கொதித்தெழு
ஆற்றே ஆழ்கடலே சீற்றங்கொள்
அடங்க மறுக்கும் மனிதர்மீது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக